துபாய்:
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்ததாக தெரியவந்துள்ளது.
வழக்கமாக கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் நடைபெறும்போது சூதாட்டங்களில் தரகர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி துபாயில் நடைபெற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அதிக அளவில் சூதாட்டங்கள் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், நிழல் உலக தாதாக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை இந்த சர்வதேச சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு தரகரும் கோடிக்கணக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் டி நிறுவனமும் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. துபாய் நகரத்தில் ஏராளமான சூதாட்டத் தரகர்கள் கூடி இந்த சூதாட்டத்தை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 5 சூதாட்டத் தரகர்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மின்னணு சாதனங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.