சென்னை;
அதிமுகவுடன் பிஜேபி கூட்டணி சேர்ந்தால் என்ன தவறு, டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது யார் ஆட்சியில் நடந்தது என்பதை அமலாக்கத்துறை கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
உலகத்தில் உள்ள ஏழு கண்டங்களில் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் உள்ள உயர்ந்த மலைகளில் ஏறி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியை கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், “தமிழக அரசு பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி வழங்கி வருகிறது.
அதேபோல் மலையேற்ற வீரர் வெங்கட சுப்பிரமணியனுக்கும் நிதி வழங்க வேண்டும். அவர் இந்தியாவின் உயரியசிகரத்தில் ஏறி சாதனை படைக்க உள்ளார்.
டாஸ்மாக்கை பொறுத்தவரை நாற்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்று உள்ளது.
யார் ஆட்சியில் ஊழல் நடைபெற்றது, யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணை நடத்தி கண்டுபிடிக்கும் என நம்புகிறேன்.
மதுவே வேண்டாம் என்பதுதான் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை. மக்களின் மனநிலையும் அவ்வாறே இருக்கிறது. தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது.
அரசு கண்காணித்து கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பரவுகிறது என்பது தவறான தகவல். ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்தோம். அவர் அனுமதி வழங்கவில்லை.
தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அரசியல் காரணத்தினாலேயே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டு வைத்தால் என்ன தவறு. அரசியல் கட்சிகளுக்கு கொள்கையே கிடையாது.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். அதனை நிறைவேற்றுவதில்லை மக்களை ஏமாற்றுகின்றனர்.
மக்கள் ஏமாளிகளாகவே வாழ்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நல்லது. நான்கு ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1095 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வன்கொடுமை சட்டம் பெயர் அளவிலேயே உள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.