இந்திய ஹாக்கி அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த வந்தனா கட்டாரியா சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு !!

புதுடெல்லி:
இந்திய ஹாக்கி அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த வந்தனா கட்டாரியா சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

32 வயதான வந்தனா இதுவரை 320 சர்வதேச போட்டிகளில் விளையாடி 158 கோல்கள் அடித்துள்ளார். இந்திய பெண்கள் ஹாக்கி வரலாற்றில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் என்ற சிறப்புக்குரியவர்.

முன்கள வீராங்கனையான வந்தனா 2009-ம் ஆண்டு சர்வதேச ஹாக்கியில் அறிமுகம் ஆனார். 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்ட போதிலும், சிறந்த நிலையாக 4-வது இடத்தை பிடித்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

அதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் ‘ஹாட்ரிக்’ கோல் போட்ட ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

2016-ம் ஆண்டு வந்தனா தலைமையிலான இந்திய அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மகுடம் சூடியது. 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியில் அங்கம் வகித்தார்.

காமன்வெல்த், உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இந்திய அணிக்காக கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் புரோ ஹாக்கி லீக்கில் களம் கண்டார். அவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ரோஷ்னாபாத்தை சேர்ந்த வந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இன்றுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து விடைபெறுகிறேன். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால் இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன்.

எனக்கு பக்கபலமாக இருந்த சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

களத்தில் ரசிகர் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு, திரில்லிங்கான கோல்கள், பெருமைக்குரிய இந்திய அணியின் சீருடை அணிந்தது எல்லாமே எப்போதும் எனது நினைவில் எதிரொலிக்கும். ஒலிம்பிக் சிறப்பு வாய்ந்தது.

அதிலும் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மோதல், எனது வாழ்வில் மிகவும் உணர்வுபூர்வமான ஆட்டங்களில் ஒன்றாகும்.

இத்துடன் எனது ஹாக்கி வாழ்க்கை முடிந்து விடப்போவதில்லை. நான் சர்வதேச போட்டியில் இருந்து மட்டுமே ஒதுங்குகிறேன்.

மற்றபடி தொடர்ந்து இந்திய பெண்கள் ஹாக்கி லீக்கில் விளையாடுவேன். கோல் அடிப்பேன். உத்வேகம் அளிப்பேன். ஹாக்கி விளையாட்டு மீதான ஆர்வம் எனக்குள் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

வந்தனாவுக்கு புகழாரம் சூட்டியுள்ள ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், ‘வந்தனா வெறும் கோல் அடிப்பவர் மட்டுமல்ல.

இந்திய தாக்குதல் ஆட்டத்தின் இதயதுடிப்பாக இருந்தார். கடின உழைப்பாளி. மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஒரு தலைவர்.

இந்திய அணியின் முன்கள வரிசையில் குறிப்பாக அழுத்தமான சூழலில் முக்கிய பங்களிப்பை வழங்கி, உலக அரங்கில் அணியின் எழுச்சிக்கு வித்திட்டவர்.

அத்துடன் இந்திய ஹாக்கியில் ஒரு தரத்தை வருங்கால சந்ததியினருக்கு நிர்ணயித்துள்ளார்’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *