வேகப்பந்து வீரர் பும்ரா ஒரு மேதை என்று பாராட்டிய ரோகித் சர்மா!!

நியூயார்க்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து 2- வது வெற்றியை பெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது.

ரிஷப் பண்ட் அதிக பட்சமாக 31 பந்தில் 42 ரன்னும் (6 பவுண்டரி), அக் ஷர் படேல் 18 பந்தில் 20 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் தலா 3 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

120 ரன் இலக்கை பாகிஸ்தான் எளிதில் எடுக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை அந்த அணியால் தாக்கு பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 31 ரன் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ஜஸ்பிரீத் பும்ரா 14 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அவர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக் ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா வேகப்பந்து வீரர் பும்ரா ஒரு மேதை என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எங்களது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. பாதி இன்னிங்சுக்கு பிறகு நாங்கள் நல்ல பார்ட்னர் ஷிப்பை அமைக்க தவறி விட்டோம். 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்தோம். ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது. 140 ரன்கள் வரை எதிர் பார்த்தேன்.

ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் மிகவும் அபாரமாக பந்து வீசினார்கள். 119 ரன் என்றாலும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்று வீரர்களுக்கு நம்பிக்கை அளித்தேன். நமக்கு நடந்தது போல் அவர்களுக்கும் நடக்கலாம் என்றேன்.

இந்த உலக கோப்பை முழுவதும் பும்ரா இதே மாதிரியான மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அவரது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. பந்துவீச்சில் அவர் ஒரு மேதையாவார். இது ஆரம்பரம் மட்டுமே. இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது.

ரசிகர்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. நாங்கள் எங்கு விளையாட சென்றாலும் திரண்டு வந்து ஆதரவை தருகிறார்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது பெரிய புன்னகையுடன்தான் செல்வார்கள் என்று உறுதியாக சொல்வேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற 7-வது (8 ஆட்டம்) வெற்றியாகும்.

இந்த தொடரில் 2-வது வெற்றி கிடைத்தது. ஏற்கனவே அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 4 புள்ளியுடன் இருக்கும் இந்திய அணி 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 12-ந்தேதி சந்திக்கிறது.

பாகிஸ்தான் 2-வது தோல்வியை தழுவியது. ஏற்கனவே அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்று இருந்தது. இதனால் அந்த அணி வெளியேற்றப் படும் நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அடுத்த ஆட்டத்தில் கனடாவுடன் நாளை மோதுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *