திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.
பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.