”ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா பஞ்சாப்”?

சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

இதனை தொடர்ந்து இன்றிரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர் கொள்கிறது.


பஞ்சாப் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத், லக்னோ அணிகளை அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக 2 அரைசதம் அடித்து அசத்தினார்.

பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷசாங் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் வீழ்ந்தது. கடந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது.

கைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கடந்த மூன்று ஆட்டங்களில் ‘இம்பேக்ட்’ வீரராக மட்டும் ஆடிய சஞ்சு சாம்சன் இதில் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பதுடன் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிக்க இருக்கிறார்.

பேட்டிங்கில் சாம்சன், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் தீக்ஷனா, ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டேவும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மொத்தத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க பஞ்சாப் அணியும், வெற்றிப்பாதையில் பயணிக்க ராஜஸ்தான் அணியும் மல்லுக்கட்டும். உள்ளூர் சூழல் பஞ்சாப் அணிக்கு சற்று சாதகமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

இதில் ராஜஸ்தான் 16 ஆட்டங்களிலும், பஞ்சாப் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *