“நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் ; எங்களுக்கு நிபந்தனை விதிக்க முதல்வர் ஸ்டாலின் அதிமுக தொண்டரா?” – புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன்!!

புதுச்சேரி:
“நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம். எங்களுக்கு நிபந்தனை விதிக்க முதல்வர் ஸ்டாலின் அதிமுக தொண்டரா?” என புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில பிற அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: தேர்தல் கூட்டணி என்பது அதிமுக வெற்றிக்காக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் கூட்டணி தான்.

தமிழகத்தில் கொடிய திமுக அரசை வீட்டுக்கு அனுப்பக்கூடிய ஒரு மெகா கூட்டணியை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைப்பார். அவரது ஆலோசனைப்படி புதுச்சேரியிலும் அதிமுக வெற்றி வாய்ப்பை பெறும். புனித இடமாக கருதப்பட வேண்டிய சட்டப்பேரவையை வெற்று அரசியல் செய்யும் இடமாக தமிழக திமுக முதல்வர் ஸ்டாலின் மாற்றி வருகிறார்.

தமிழகத்தின் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஆட்சியின் ஊழல், முறைகேடுகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரப் பூர்வமாக எடுத்துரைக்கிறார். உடனே அவரை பேச விடாமல் தடுப்பதும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை உருவாக்குவதும், சர்வாதிகார செயலாக வெளியேற்றுவதிலும் குறிக்கோளாக தமிழக முதல்வர் உள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றிவிட்டு நீட் தேர்வை சம்பந்தபடுத்தி பாஜக கூட்டணி பற்றி பேசுகிறார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிறார். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம்.

எங்களது கூட்டணியில் நிபந்தனை விதிக்க திமுக முதல்வர் ஸ்டாலின் என்ன அதிமுக தொண்டரா? முதலில் அவரது கூட்டணியை பற்றி அவர் சிந்திக்க வேண்டும். பல்வேறு கொள்கை முரண்பாடான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

அதுவும் அதிமுக இல்லாத சூழ்நிலையில் சட்டப்பேரவையில் பெரிய சாதிப்பு மன்னன் போன்று அதிமுகவை விமர்சனம் செய்கிறார். இவரது செயல் 23-ம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இன்றும் ஒருசிலர் பாஜகவுக்கு ஆதரவாகவும், முதல்வருக்கு ஆதரவாகவும் உள்ளனர். புதுச்சேரி அரசும், திமுக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் அனுசரணையாக நடந்து வருகிறது.

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சிறிது காலமே இருக்கும் சூழ்நிலையில் அரசின் எதிர்க்கட்சிகளிடம் அனுசரணையாக நடக்கும் சூழ்நிலை தேவையற்றதாகும்.

அது சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் அரசின் கூட்டணிக்கு நிச்சயம் எதிர்விணைகளை ஏற்படுத்தும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் நம்மோடு இருப்பவர்கள் யார்? நமக்கு துணை நிர்பவர்கள் யார். யார்? நமக்கு எதிரியாக செயல்படுவார்கள் என உணர்ந்து அரசை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *