சென்னை;
ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற பின்பு பேசிய டோனி, “இது போன்ற தொடர்களில் ஆடும் போது உங்களுக்கு வெற்றி என்பது மிகவும் முக்கியம்.
துரதிர்ஷ்டவசமாக ஆரம்ப கட்டங்களில் எங்களால் சரியாக விளையாட முடிய வில்லை. அதற்கு நிறைய விஷயங்களை சொல்லலாம். வெற்றி பெற்றது ஒட்டு மொத்த அணிக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.
இதன் மூலம் எந்த துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதற்கு இந்த வெற்றி உதவியாக இருக்கும். கிரிக்கெட்டில் நாம் நினைத்தது போல் நடக்க வில்லை என்றால் கடவுள் நமக்கு அனைத்தையும் கடினமாக மாற்றிவிடுவார். இந்த ஆட்டம் கூட எங்களுக்கு கடினமாகதான் இருந்தது.
நாங்கள் இந்த தொடரில் பவர்பிளேவில் மோசமாக விளையாடினோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நாங்கள் நினைத்த தொடக்கத்தை பெறமுடியவில்லை. சில நேரங்களில் தவறான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விடுகின்றோம். இது எல்லாம் எங்கள் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.
சேப்பாக்கம் ஆடுகளமும் கொஞ்சம் தோய்வாக இருந்தது. நாங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியே விளையாடும்போது எங்கள் அணியின் பேட்டிங் நன்றாகவே இருக்கிறது.
இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கின்றோம். இதன் மூலம் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய ஷாட் ஆடுவதற்கான நம்பிக்கை கிடைக்கும்.
இதேபோல அஸ்வின் மீது நாங்கள் அதிக நெருக்கடியை அளிக்கிறோம் என்று நினைக்கின்றேன்.முதல் 6 ஓவர்களில் அவர் 2 ஓவர்கள் வீசுகிறார். எனவே இந்த ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்து பார்ப்போம் என்று எங்களுக்கு தோன்றியது.
பவுலிங் தாக்குதல் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதே போன்று பேட்டிங்கிலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை பெற வேண்டும்.
ஷேக் ரசித் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கின்றேன். அவர் சில ஆண்டுகளாக எங்கள் அணியில் இருந்தார். தற்போது அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்து இருக்கிறது.
இயல்பான ஷாட்களை ஆடியே அவர் பவுலர்களை ஆதிக்கம் செலுத்த முடியும். எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்கிறது. இதை சொன்னவுடன் எனக்கு ஏன் இந்த விருது தருகிறார்கள் என்று தான் யோசித்தேன். ஏனென்றால் நூர் அகமது அபாரமாக பந்துவீசினார்” என்று தெரிவித்தார்.