சென்னை;
ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.
அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார்.
அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.
நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், டெல்லி-மும்பை போட்டி முடிந்த பின்பு ஜஸ்பிரித் பும்ராவும் கருண் நாயரும் சமாதானமாகி கட்டிப்பிடிக்கும் வீடியோவை டெல்லி அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.