தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் – சட்டசபையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு!!

சென்னை:
சட்டசபையில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விரிவாக பேசினார். அப்போது அவர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். அதன்படி தமிழ் அறிஞர்களுக்கு ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு ரூ.3,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும், எல்லை காவலர்களுக்கு ரூ.5,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

கோவையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவ சிலை நிறுவப்படும். தமிழ் அறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடமை செய்யப்படும்.


மதுரவாயல் வட்டம் குண்டலத்தில் திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும். தமிழ் தென்றல் வி.கல்யாண சுந்தரனாரை போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான குண்டலத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கம், மார்பளவு வெண்கல சிலை நிறுவி அங்குள்ள நூலகம் மேம்படுத்தப்படும்.

மொழி பெயர்ப்பாளர் ஜமதக்கிணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத் தூண் நிறுவப்படும். கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாள் நவம்பர் 9-ம் நாளை தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும். இதே போல் இசை அரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூ.3 கோடி செலவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.

கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் மார்ஷல் நேசமணியின் போர் படை தளபதியாக விளங்கிய குமரிக்கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் நூற்றாண்டையொட்டி அவருக்கு நாகர்கோவிலில் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள நினைவரங்கங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாவட்ட, மாநில அளவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.

அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதல் உள்ளிட்ட சேவைகள் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வண்ணம் இணைய வழியில் அவை மேற்கொள்ளப்படும்.

இது ஜூலை மாதம் முதல் (கியூ ஆர் கோடு வசதியுடன்) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *