வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

சென்னை:
வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தி.மு.க. அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமங்களில் உள்ள நிலங்களின் வகைகள், விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம், பிறப்பு இறப்பு விவரம், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் பணியையும், அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் சேர்க்கின்ற பணியையும் செவ்வனே செய்து வருபவர்கள் கிராம உதவியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கிராமங்களின் ஆணிவேராக திகழ்பவர்கள் கிராம உதவியாளர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கிராம உதவியாளர்கள் 24 மணி நேரமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிபவர்கள். இயற்கைச் சீற்றங்களான பெருமழை, புயல், சுனாமி போன்றவை ஏற்படும் காலங்களிலும், தேர்தல் நேரத்திலும் இரவு பகல் பாராமல் அயராது உழைக்கக் கூடியவர்கள் கிராம உதவியாளர்கள்.

அரசு ஊழியர்களாக இருந்தும் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்குக் காரணம் இவர்களுக்கு அரசு ஊழியர்களைப் போல காலமுறை ஊதியம் வழங்கப்படாததுதான்.

வருவாய்த் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இவர்களுக்கு மட்டும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்ற ரீதியில் அவர்களது பணி இருந்து வருகிறது.

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் தெரிவிக்கிறது.

இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான கிராம உதவியாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தவிப்பதாகவும் கிராம உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யவும், பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *