”பயங்கரவாதமும், தீவிரவாதமும் முற்றிலும் ஒடுக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும்” – ஜி.கே.வாசன்!!

சென்னை:
பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 12 சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் ஈவு இரக்கமின்றி கோழைத்தனமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. சுற்றுலாவுக்குச் சென்றவர்கள் மீது நடத்திய தாக்குதல் கொடுமையிலும் கொடுமையானது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய, வீடு திரும்ப உரிய நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக தமிழகம் திரும்ப மத்திய தமிழக அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சட்டத்தின் முன்நிறுத்தி கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.

பயங்கரவாதமும், தீவிரவாதமும் முற்றிலும் ஒடுக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *