ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிதறவிட்டு கதறவிட்டு வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி!!

மும்பை;
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று ஜெய்ப்பூரில் மோதின. இதில் முதலில் ஆடிய மும்பை அணி அதிரடியாக ஆடியது. ரிக்கெல்டன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் அவர்கள் 217 ரன்களை குவித்தனர்.

இதையடுத்து, 218 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு இன்று பேட்டிங் சொதப்பியது. தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலே சூர்யவன்ஷி டக் அவுட்டானார். அதன்பின்பு, ராஜஸ்தான் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் சிக்ஸர்களை பறக்கவிட அவரும் 6 பந்துகளில் 2 சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்தடுத்து விக்கெட்:

இதையடுத்து, நிதிஷ் ராணா – கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தது. பராக் அடுத்தடுத்து பவுண்டரி விளாசினார். நிதிஷ் ராணாவும் பவுண்டரி விளாசி அதிரடிக்கு மாற முயற்சிக்கும் முன் இந்த ஜோடியை போல்ட் பிரித்தார். நிதிஷ் ராணா 11 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதன்பின்பு, அதிரடி காட்டிக் கொண்டிருந்த கேப்டன் ரியான் பராக்கை பும்ரா தனது வேகத்தால் காலி செ்தார். அவர் 8 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய ஹெட்மயர் வந்த வேகத்தில் டக் அவுட்டாக ராஜஸ்தானில் தோல்வி உறுதியானது.

47 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி துருவ் ஜோரல் – ஷுபம் துபே சேர்ந்தனர். இந்த ஜோடி சற்று அதிரடியாக ஆட முயற்சித்தது. ஆனால், ஷுபம் துபே அதிரடி காட்டிய நிலையில் அவரும் பாண்ட்யா பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன் எடுத்து அவுட்டானார்.

மறுமுனையில் துருவ் ஜோரல் 11 பந்துகளில் 1 சிக்ஸருடன் 11 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த தீக்ஷனா 2 ரன்னில் அவுட்டாக 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 100 ரன்களை கடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆர்ச்சர் அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசியதால் ராஜஸ்தான் 100 ரன்களை கடந்தது. ஆர்ச்சர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி ராஜஸ்தான் ரசிகர்களை ஆறுதல் படுத்தினார்.

ப்ளே ஆஃப்பில் மும்பை:
கடைசியில் ராஜஸ்தான் அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்காக தீபக் சாஹர், பும்ரா, பாண்ட்யா, கரண் சர்மா மிரட்டலாக பந்துவீசினார். குறிப்பாக, கரண் சர்மா தனது சுழலால் துருவ் ஜோரல், தீக்ஷனா, கார்த்திகேயா ஆகிய 3 பேரை அவுட்டாக்கினார்.

இந்த வெற்றி மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் மும்பை அணி 14 புள்ளிகளை எட்டியிருப்பதுடன் வலுவான ரன்ரேட்டை வைத்திருப்பதால் அவர்கள் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *