டெல்லி ;
டெல்லி வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் நகதாணியுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார்.
தற்போதைய பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு நிலை குறித்து இருவரும் பேசினார்கள். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை பற்றி அவர்கள் விவாதித்தனர்.
இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடனான வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்காக ஜப்பான் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்கள் மகத்தான பங்களிப்புக்காக உங்களை பாராட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.லாவோஸ் நாட்டில் 2024-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் சந்தித்தனர்.
தற்போது 6 மாதங்களுக்கு பிறகு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் 2-வது முறையாக சந்தித்து உள்ளனர்.