சேலம் ;
மும்பையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21 முதல் 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் 3வது உலகளாவிய ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கண்காட்சிக்கான அரங்குகள் முன் பதிவு துவங்கி உள்ளது. இந்த கண்காட்சி மும்பை கன்வென்ஷன் அன்ட் எக்சிபிஷன் சென்டர், கோரேகானில் நடைபெற உள்ளது.
ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஜவுளி எந்திரங்கள் மற்றும் ஜவுளி உற்பத்தி சார்ந்த துணைக் கருவிகள் என ஏராளமான கருவிகளை காட்சிப்படுத்த உள்ளன. இது ஜவுளி உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்கான சிறந்த கண்காட்சியாக இருக்கும் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதன் முந்தைய கண்காட்சிகளை விட அதிநவீன தொழில்நுட்பத்தில் ஏராளமான எந்திரங்கள் தற்போது நடைபெற உள்ள கண்காட்சியில் இடம் பெறும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக நம்பிக்கை, அதிக ஊக்கம் மற்றும் அதிக வணிக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.இதில் நெசவு, பதப்படுத்துதல், ஆடை எந்திரங்கள் மற்றும்உதிரி பாகங்கள் என மொத்தம் 14 பிரிவுகள் இடம்பெற உள்ளன.

இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் நூற்பு பிரிவுகளை மேம்படுத்துவதோடு நூற்பு எந்திரங்களுக்கான உதிரி பாகங்களை இது சார்ந்த நிறுவனங்களிடம் காட்சிப்படுத்துவதாகும். மேலும் இந்த கண்காட்சியில் வீட்டு ஜவுளி மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளும் இடம்பெறுகிறது. அத்துடன் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
3வது உலகளாவிய ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கண்காட்சியானது வாங்குபவர்கள், டீலர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து இந்தியாவில் ஜவுளித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.