சென்னை:
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் காலதாமதமாக வந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த 11 ம்தேதி சித்திரை முழுநிலவு மாநாடுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் உயிரிழந்தார்.
இறந்த இளைஞர் வீட்டிற்கு சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு நிதி உதவியாக ரூ. 5 லட்சம் வழங்கினார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு வரவேற்கதக்கது. ஆனால் ஆறாண்டு காலம் இந்த தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1 கோடி ரூபாய் வரை நிதி வழங்க அரசு முன் வர வேண்டும்.
இது போன்ற வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் இல்லை என்பதால் தாமதமாக தீர்ப்பு வந்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தளில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக கூறுகிறது.
பெண்கள் தைரியமாக வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே தமிழக அரசு பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும். மது கலாச்சாரத்தை கொண்டு வந்தது, ஆளும் கட்சியும் திராவிட கட்சிகளும் தான்” என்று கூறினார்.