சென்னை;
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.
டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு லீக்கிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். அதன் பிறகு அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தினாலும் 15 புள்ளியை தான் தொட முடியும்.
மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி அதன் பிறகு எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்தது. முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் வீழ்ந்தது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (510 ரன்), ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மாவும், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, கரண் ஷர்மாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
டெல்லி அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டு கம்பீரமாக பயணித்தது. அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று தள்ளாடுகிறது.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (493 ரன்) நல்ல நிலையில் உள்ளார். அபிஷேக் போரெல், அஷூதோஷ் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ் அவ்வப்போது பங்களிப்பு அளிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், கேப்டன் அக்ஷர் பட்டேல் வலு சேர்க்கிறார்கள். முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) விலகியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.
இந்த சீசனில் உள்ளூரில் கடைசி ஆட்டத்தில் ஆடும் மும்பை அணி வெற்றிகரமாக நிறைவு செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவதுடன், பிளே-ஆப் சுற்றையும் உறுதி செய்ய தீவிரம் காட்டும். டெல்லிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வென்று இருப்பதால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் வாழ்வா – சாவா? நிலையில் களம் காணும் டெல்லி அணி பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்கும். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 ஆட்டங்களிலும், டெல்லி 16 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில் வான்கடேவில் மும்பை அணி 6 ஆட்டங்களில் ஆடி 4-ல் வாகை சூடியிருக்கிறது.
இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மும்பையில் நேற்று மழை செய்தது. அங்கு அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.
டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், டி.நடராஜன், குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், துஷ்மந்தா சமீரா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.