ஊட்டி:
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஆர்கிட் மலர்கள், லில்லியம் மலர்கள் வாடாமல் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
இந்த மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்களால் பொன்னியின் செல்வன் அரண்மனை, நுழைவுவாயில், கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்னபறவை ரதம் உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் பூங்காவில் உள்ள மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் 200 லில்லியம் மலர்கள், 100-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் ஆர்க்கிட் மலர்கள் ஆகியவைகள் வைக்கப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சி தொடங்கியதில் இருந்து கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தினமும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் ஊட்டி மலர் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.