பேச்சுக் குறைபாடு நீக்கும் சேத்தியாதோப்பு பாலமுருகன் தல வரலாறு…….

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். குன்றிருக்கும் இடங்கள் மட்டுமல்லாமல் அழகன் முருகனுக்கு ஊர்கள்தோறும் பல ஆலயங்கள் உள்ளன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அமைந்திருக்கும் பாலமுருகன் கோவில் பற்றி இங்கு பார்ப்போம்.

தல வரலாறு

நூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் நிறைந்த கிராமமாக சேத்தியாதோப்பு இருந்துள்ளது. இங்கு வசித்த மக்கள் தீப்பாய்ந்தநாச்சியார் ஆலயத்திற்கும், கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்று வணங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த ஊரில் ஒரு தீவிர முருக பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் பழனி, சுவாமிமலை, மருதமலை, திருச்செந்தூர், திருத்தணி, என அறுபடை வீட்டுக்கும் செல்வதே தன்னுடைய முதல் பணியாக கொண்டவர். முருகனின் பணியே முதல் பணி என வாழ்ந்து வந்த இவர், தன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வேல் வைத்து அதை வணங்க ஆரம்பித்தார்.

வேலு நயினார் என்பவர் இவரின் தீவிர முருக பக்தியைக் கண்டு, இவருக்காக ஓடுகள் வேய்த கட்டிடம் ஒன்றைக் கட்டி அதில் வள்ளி தெய்வானை சமேதராக பாலமுருகனை பிரதிஷ்டை செய்தார். பின்பு நூதன ஆலயமாக அமைக்கப்பட்ட இந்த ஆலயம், தற்போது கடலூர் மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஆலய அமைப்பு

இந்த ஆலயம் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தின் மேலே மயில்மீது சுப்பிரமணியர் அழகாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

இவரின் இருபுறமும் துவார பாலகர் கள் கம்பீரமாக நிற்கின்றனர். அவர்களை வணங்கி விட்டு மகா மண்டபத்திற்குள் சென்றால் முதலில் நாம் தரிசிப்பது வேல், பலிபீடம், மயில். இதன் இடது பக்கம் இடும்பன், வலப்பக்கம் கடம்பன் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தில் அர்த்த மண்டபம் கிடையாது.

கருவறை வாசலில் விநாயகர், வள்ளி- தெய்வானை உடனாய பால முருகன் உற்சவர் சிலை உள்ளது. கோவில் கருவறையில் வள்ளி- தெய்வானையுடன் பாலமுருகன் கிழக்கு முகம் நோக்கி நின்றகோலத்தில் அற்புதமாய் காட்சி தருகிறார்.

கோவில் பிரகாரத்தில் விநாயகர், ஆதிபாலமுருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகளும், செங்காளியம்மன் சன்னிதியும் அமைந்துள்ளது.
பிரார்த்தனைகள்

இந்த கோவிலில் ஆண் வாரிசு வேண்டி வருவோர், முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, வழிபட்டால் நிச்சயமாக ஆண் வாரிசு கிடைக்கும். அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு முருகனின் திருநாமங்களில் ஒன்றைத்தான் பக்தர்கள் பெயராக சூட்டுகிறார்கள்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் முருகன் சன்னிதி முன்பு மாவிளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சகல பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைப்பார் வேலன் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க, நல்ல வேலை அமைய வேலனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து, பச்சை பட்டாடை அணிவித்து பிரார்த்தனை செய்தால் கல்வியையும், வேலையையும் வேலவன் அளிக்கிறான்.


பேச்சுத்திறன் வராத குழந்தைகள், இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு தேனும், திணைமாவும் வைத்து பூஜை செய்து அதை அருட்பிரசாதமாக வாங்கி சாப்பிட்டால் நாளடைவில் பேச்சுத்திறன் வருவதாகவும் கூறுகிறார்கள்.

கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை வளரவும், குடும்பத்தில் பிரச்சினைகள் தீரவும் வள்ளி, தெய்வானை, பாலமுருகனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.
திருவிழாக்கள்

ஆண்டு திருவிழாவாக பங்குனி உத்திரம் ஒரு நாள் உற்சவம் நடைபெறும். அன்று காலையில் ஆற்றங்கரையில் இருந்து காவடிகள், பால்குடம் என அனைத்தும் வீதியை சுற்றி கோவிலை வந்தடையும். பின்பு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும்.

வைகாசி விசாகம் அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எம்பெருமான் காட்சி தருவார். மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி, விசாகம் நட்சத்திரம் ஆகிய மூன்று தினங்களிலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெறுகிறது.

கோவில் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


அமைவிடம்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு என்ற ஊரில் அமைந்துள்ளது பாலமுருகன் கோவில்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *