கோவில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை;
கோவில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் வேண்டுதல்களுக்காக பூஜை நேரங்களில் கோவில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என இந்து அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான திண்டிஸ்வரர், வீரராகவ விநாயகர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பூஜைகள் எதுவும் நடத்தப்படாமல் பல ஆண்டுகளாக மூடி இருப்பதாகவும், இக்கோவிலுக்கு நிர்வாகிகளை நியமித்து, தினசரி பூஜைகள் நடத்த இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிடக் கோரி அப்பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பூஜைகள் நடத்த வசதியில்லாத கோவில்களில், தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் கோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த திட்டத்தின் கீழ் திண்டிஸ்வரர் கோவிலிலும் ஒரு கால பூஜை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது அப்போது, மூடி இருக்கும் அலங்கியம் திண்டிஸ்வரர் திருக் கோவிலை திறந்து, தினமும் ஒரு வேளை பூஜைகள் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இந்து அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை வைக்கும் வகையில் பூஜை நேரங்களில் கோவில்கள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் கோவில்களில் தினமும் ஒரு நேர பூஜையாவது நடத்தப்பட வேண்டும் எனவும் இந்து அறநிலைய துறைக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *