தி.மு.க.வில் இருந்து மொத்தமாக ஓரங்கப்பட்டப்படுகிறாரா பொன்முடி?

சென்னை
தி.மு.க. அமைச்சர்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் மாட்டிக்கொள்பவர் பொன்முடி. அவரது பேச்சு சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவி, கட்சி பதவி ஆகியவற்றை இழந்துள்ளார்.


பொன்முடி பேசிய சர்ச்சைகள் சிலவற்றை குறித்து பார்ப்போம்…

அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை பொன்முடி, ‘ஓசி பயணம்’ என்று பேசியதும், அதன் பின்னர் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும் சர்ச்சையானது.மேலும், பள்ளிக்கட்டிட திறப்பு விழாவில் பொன்முடி பங்கேற்றார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக புகார் அளித்தார். பெண்ணின் கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலரிடம் பொன்முடி விசாரித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பேசிய பொன்முடி, எனக்கா ஓட்டு போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க.

அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்ய சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ் விட்டது நான், குடி தண்ணீர் விட்டது நான்!

ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம் என்று கூறினார்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அய்யா ஆஸ்பத்திரி வேணும் என்று கேட்ட பொதுமக்களிடம், நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய் என்று கேட்டார்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பகுதியில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமை ஆய்வு செய்த பொன்முடி, அங்கிருந்த பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கேள்வி கேட்டு விளக்கம் அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்காமல் ஒருமையில் பேசினார். இதனை தொடர்ந்து, அவரது உயர்க்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது.

கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொன்முடியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் உள்ளார்.

இதனிடையே, தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் ஏழு மண்டல பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமித்தது. கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி ஆகியோர் ஏழு மண்டலங்களிலும் கூட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனிடையே ஏழு மண்டங்களாக இருந்தது எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. கட்சி ரீதியிலான கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதில் பொன்முடிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

மேலும் பொன்முடி மகன் கவுதமசிகாமணியின் வசம் இருந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளை பறித்து புதிக கட்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் கவுதமசிகாமணியின் பொறுப்பையும் கட்சி மேலிடம் குறைத்தது.


இதனால், பொன்முடி மீது கட்சி தலைமை கடும் கோபத்தில் உள்ளது வெட்ட வெளிச்சமானது.

இந்த நிலையில் விழுப்புரத்தில் நடைபெறும் தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடர்பான பேனரில் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழுப்புரத்திலேயே பொன்முடி ஓரம்கட்டப்படுவதால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தி.மு.க.வில் இருந்து மொத்தமாக பொன்முடி ஓரங்கப்பட்டப்படுகிறாரா? என கேள்வி எழுந்துள்ளது.

பொன்முடி என்றால் விழுப்புரம், விழுப்புரம் என்றால் பொன்முடி என்ற வகையில் பிரபலமான அவருக்கு தற்போது இறங்குமுகமாகவே உள்ளது. விழுப்புரம் மாவட்ட தி.மு.க. தலைமையகம் தற்போது லட்சுமணன் கைவசம் உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *