சென்னை:
தந்தையர் மறைந்த நிலையிலும் பொதுத்தேர்வினை ஆர்வத்துடன் எழுதியதுடன், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த இரண்டு மாணவிகளை பாராட்டி, அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 2024-2025 ஆண்டுக் கான மேல்நிலை பொதுத்தேர்வு நடைபெற்றபோது திருச்சி மாவட்டம் கருங்குளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற பி. சத்யபிரியா என்ற மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக 10.3.2025 அன்று இரவு இறந்து விட்டார்.
தந்தையார் மறைந்த நிலையில் 11.3.2025 அன்று நடைபெற்ற கணிதத் தேர்வினை எழுதியதுடன். கணிதத்தில் 79 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 528 மதிப்பெண் களுடன் பள்ளியில் முதலாவதாகவும் வந்துள்ளார்.
2024-2025 ஆண்டுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு நடைபெற்றபோது திருச்சி மாவட்டம் தேனேரிப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்ற ச.சாலினி என்ற மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக 12.03.2025 அன்று இரவு இறந்து விட்டார்.
இந்நிலையில் 13.3.2025 அன்று நடைபெற்ற கணினி அறிவியல் தேர்வினை எழுதியதுடன், கணினி அறிவியலில் 78 மதிப்பெண்களுடன், மொத்தம் 367 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (25.5.2025) திருச்சிராப்பள்ளியைச் இந்த இரண்டு மாணவிகளும் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை பாராட்டி, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்ததற்காக பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோ.வி.செழியன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கோ.கிருஷ்ண பிரியா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.