”சத்குருவுக்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கி கௌரவம்”!

சென்னை:
இந்திய வம்சாவளிப் பிரமுகர்களை அடையாளம் கண்டு, கனடா இந்தியா அறக்கட்டளை ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான இவ்விருது சத்குருவுக்கு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

கனடாவின் ஒன்டாரியோ நகரில் கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு விழாவில், கனடா இந்தியா அறக்கட்டளையின் தலைவர் ரிதேஷ் மாலிக், கனடா நாட்டில் செயல்படும் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் ஹிமதர் மதிபத்லா மற்றும் கோதாரி குழுமத்தின் தலைவர் நார்டன் கோதாரி ஆகியோர் இணைந்து சத்குருவுக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கினர்.

உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள சத்குரு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், ஒரு விழிப்புணர்வான உலகை உருவாக்க அவர் மேற்கொண்டு வரும் பணிகளையும் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மண்ணைக் காப்போம் (Save Soil) போன்ற உலகளாவிய இயக்கங்கள் மூலம் அவர் ஏற்படுத்தி வரும் தாக்கம் பரவலாகப் பாராட்டப்படுகிறது.

கனடா இந்தியா அறக்கட்டளை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “கனடா இந்தியா அறக்கட்டளையின் ஆண்டின் சிறந்த உலகளாவிய இந்தியர் விருதை சத்குரு ஏற்றுக்கொண்டதற்கு, இந்திய-கனடிய சமூகத்தின் சார்பாக மிக்க நன்றி. விழிப்புணர்வான மற்றும் கருணைமிக்க மனிதகுலமே முன்நோக்கி இருக்கும் பாதை எனும் சத்குருவின் கருத்து ஆழமாக எதிரொலிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளது.

இதேபோல், சத்குரு தனது ‘எக்ஸ்’ தளத்தில், “கனடா மற்றும் இந்திய நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு இந்திய சமூகம் பங்களிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அரவணைப்புக்கும், விருந்தோம்பலுக்கும் மிகவும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

சத்குருவின் இந்த விருது, சர்வதேச அளவில் இந்தியர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பிற்கு மேலும் ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *