கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் – அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சலுகை!

வாஷிங்டன்:
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரூத் சமூக ஊடக தளத்தில் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் அற்புதமான கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் ஓர் அங்கமாக விரும்பும் கனடாவிடம், ஒரு தனித்த சுதந்திர தேசமாக சேர விரும்பினால் 61 பில்லியன் டாலர் அதற்காக செலவாகும். ஆனால், அவர்கள் எங்களின் நேசத்துக்குரிய 51-வது மாநிலமாக மாறினால் ஒரு டாலர் கூட செலவாகாது என்று நான் தெரிவித்தேன். அவர்கள் சலுகையை பரிசீலனை செய்து வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

மாநில அந்தஸ்தை நிராகரிக்கும் கனடா: தனது தேர்தல் வெற்றிக்கு பின்பு கனடா பிரதமர் மார்க் கார்னி, மே மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இரண்டு நாட்டுத் தலைவர்களும் கோல்டன் டோம் திட்டம் பற்றிப் பேசினார்.

கடந்த வாரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “இது கனடாவுக்கு சிறந்த யோசனையா? ஆமாம், கனடா மக்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லதுதான். என்றாலும், கனடா விற்பனைக்கு இல்லை. ஒருபோதும் விற்பனைக்கு கிடைக்காது.” என்று தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதில் இருந்து அமெரிக்கா – கனடா இடையேயான உறவுகள் கடினமாகி வருகின்றன. அவரின் கூடுதல் வரி எச்சரிக்கை, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த அழுத்தம் போன்றவை இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை மோசமடையச் செய்து வருகிறது.

கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பு: கோல்டன் டோம் என்பது, அமெரிக்காவின் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். அறிக்கைகளின் படி, 175 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஏவுகணை பாதுகாப்பு கேடயம் போன்ற அமைப்பு, பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள் போன்ற நவீன அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்கும்.

இந்த அமைப்பு 2029-க்குள் செயல்பாட்டுக்கு வரும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கூற்றுப்படி, விண்வெளியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் கோல்டன் டோம் அமைப்பு அவர்களைப் பாதுகாக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *