தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்!!

தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ்.

நடிகர் ராஜேஷ் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக அறியப்படுகிறார். ‘அந்த ஏழு நாட்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘சத்யா’, ‘விருமாண்டி’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் அவர் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்தவர். கடைசியாக விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படமே இவர் நடித்த கடைசிப் படமாக உள்ளது.

திரைத்துறையைத் தாண்டி சமூகவலைதளங்களிலும் ஆரோக்கியம் சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவராவார். புத்தக வாசிப்பு சார்ந்தும் பேசுவார்.

ராஜேஷ் ஒரு பன்முகத் திறமையாளர், சிறந்த மனிதர், நல்லொழுக்கம் நிறைந்தவர் என்று அவருக்கு திரையுலகினர் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பல்துறை கலைஞர் ராஜேஷ்: வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். குறிப்பாக, அவர் டப்பிங் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. ‘டும் டும் டும்’, ‘மஜா’, ‘உள்ளம் கேட்குமே’ உள்ளிட்ட படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர். ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்தவர்.

150+ படங்களில் நடித்தவரிடம், ‘உங்களுக்குப் பிடித்த மூன்று படங்கள்?’ என்று ஒருமுறை கேட்டபோது, “எந்த கலைஞருக்குமே முதல் முயற்சிதான் சிறந்த முயற்சி.

எனவே நான் நாயகனாக நடித்த ‘கன்னிப் பருவத்திலே’, பின் ‘அந்த ஏழு நாட்கள்’. இன்று வரை அந்தப் படத்தின் இறுதிக் காட்சி பேசப்படுகிறது. இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜ் அற்புதமாக எடுத்திருந்தார்.

அடுத்தது தேர்ந்த இயக்குநர் கே.பாலச்சந்தர், ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் என்னிடமிருந்து சிறந்த நடிப்பைப் எடுத்தார். ஆனால் இப்படி ஒவ்வொரு படத்தைப் பற்றியும் என்னால் ஒரு சிறப்பம்சத்தைச் சொல்ல முடியும்” என்றது இப்போது நினைவுகூரத்தக்கது.

அதேபோல், கரோனா காலத்தின்போது, யூடியூப் தளத்தில் அடியெடுத்து வைத்த நடிகர் ராஜேஷ், தன் அனுபவ அறிவில் கற்ற பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *