அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன் – ராமதாஸ்!!

விழுப்புரம்:
அன்புமணியை அவரது 35-வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அன்புமணியை அவரது 35 வயதில் நான் அமைச்சராக்கினேன். நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது எனது தவறு.

எங்களின் கட்சி பற்றிய பலமுறை கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நானும் பதில் சொல்லியிருக்கிறேன். தருமபுரியில் நடந்த கூட்டமொன்றில் அன்புமணி பேசியதை பார்த்திருப்பீர்கள், நானும் கேட்டேன்.

அந்தப் பேச்சில், “நான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவி நீக்கம் என்று.” அன்புமணி கேட்டிருந்தார். அது கட்சிக்காரர்களையும் மக்களையும் திசைதிருப்பும் முயற்சி. தனது தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார்.

அதற்கு சரியான விளக்கம் அளிப்பது எனது கடமை. என்னைக் குற்றவாளியாக்கி அன்புமணி அனுதாபம் தேட முயற்சித்துள்ளார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு பயணித்தக் கட்சியில் அவர் கலகத்தை உண்டாக்கினார். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருந்து பல இன்னல்களைச் செய்தவர் அன்புமணி.

பாமக என்னும் ஆளுயுர கண்ணாடியை நொடியில் உடைத்தது யார்? புதுச்சேரி கூட்டத்தில் கண்ணியம் இல்லாமல் நடந்து கொண்டது யார்? நான் ஏதோ இதைப் போகிற போக்கில் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன்.

குருவை, அன்புமணி கீழ்த்தரமாக நடத்தினார். பெற்ற தாயை பாட்டிலை வீசித்தாக்க முயன்றவர் அன்புமணி. பாமகவை வளர்த்தது யார்? சோறு தண்ணீர் இல்லாமல் பல கிராமங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன்.

கூசாமல் பொய் சொல்பவர் அன்புமணி. நான் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு செல்லவேண்டாம் என்று 108 பேருக்கு அவரே கூறியுள்ளார்.

2024 தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வேண்டுமென்று அமைத்தார் அன்புமணி. நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறினேன். அதிமுகவும், பாமகவும் இயல்பான கூட்டணி. 2024-ல் இந்தக் கூட்டணி அமைந்திருந்தால் பாமக – 3 இடங்களிலும், அதிமுகவும் 6, 7 இடங்களிலும் வென்றிருக்கும்.

பாஜக கூட்டணிக்காக அன்புமணியும், சவுமியாவும் என் கால்களைப் பிடித்து அழுதனர். அந்தக் கூட்டணிக்கான ஏற்பாட்டை சவுமியா செய்தார். தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *