”நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு” – முதலமைச்சர் ஸ்டாலின்!!

சென்னை:
சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வில், நேரமில்லா நேரத்தில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த அரசின் மீது குறை கூற வாய்ப்பு இல்லாததாலும் உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்பவும் இப்படி ஒரு தீர்மானமா? உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அதை திசைதிருப்ப இப்படி ஒரு தீர்மானமா? சபாநாயகர் அப்பாவு ஜனநாயக நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

மற்றவர்கள் மனம் வருந்தாத வகையில் தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டவர். நேர்மையான கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறக்கூடியவர்.

கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே பேரவைக்குத் தேவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். இவை இல்லாவிட்டால் பேரவை கண்ணியத்தோடு, கட்டுப்பாடோடும் இருக்காது.

இப்படிப்பட்ட அப்பாவு மீதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம் என எதிர்காலத்தில் உங்கள் மனசாட்சி உறுத்தும். பேரவைத் தலைவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே இதனை கருதுகிறோம்.

இந்த அம்பை அவை ஏற்காது. யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்த சபாநாயகர் அப்பாவு கனிவானவர். அதே நேரம் கண்டிப்பானவர்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *