சதுரகிரியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி !!

வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திரளுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மகாசிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 8-ந் தேதி சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 21 வகையான அபிஷே கங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று இரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினம், சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் சதுரகிரியில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பஸ் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சதுரகிரிக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

மலையேறு பவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுபாடுகளை வனத்துறை விதித்துள்ளது. சதுரகிரியில் மகா சிவராத்திரி, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *