இமயமலை சிகரத்தின் குன்றுகளில் வளரும் ஒரு மூலிகைச் செடி, உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராணங்களில் கூறப்படும் சஞ்சீவினி மூலிகையைப் போன்றதொரு மூலிகை இது. அத்துடன் மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ப உடலைத் தகவமைத்துக் கொள்ளவும், கதிரியக்க பாதிப்பை தடுக்கவும் இந்த மூலிகை உதவுவதாக தெரியவந்துள்ளது.
ராமாயணத்தில் லட்சுமணனை காப்பாற்ற அனுமன் கொண்டுவந்த சஞ்சீவினி மூலிகை இந்தியாவில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ரோடியோலா மூலிகையைதான் ராமாயணத்தில் சஞ்சீவினி என்று குறிப்பிட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லடாக் பகுதி மக்களிடையே இந்த மூலிகைக்கு சோலோ’ என்று பெயர். இதன் நற்பண்புகள் பற்றி அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அதேநேரம், இந்த செடியின் இலையை கீரை போல சமைத்து இப்பகுதி மக்கள் உண்கின்றனர்.
லே பகுதியை சேர்ந்த உயர்மலைப்பகுதி ராணுவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகை செடியின் மருத்துவக்குணங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
`குறைந்த காற்றழுத்தம், ஆக்சிஜன் குறைவு ஆகியவற்றால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவிக்கரமாக இருக்கும். அத்துடன் இம்மூலிகை மனஅழுத்தத்தை குணப்படுத்தும், பசியைத் தூண்டும் அம்சமும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது’ என்கிறார்கள், ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள்.