கருக்கலைப்பு உரிமையை வழங்கிய முதல் நாடாக மாறிய பிரான்ஸ்!!

பாரீஸ்,
ஐரோப்பிய நாடான பிரான்சில் பெண்கள் கருக்கலைப்பு செய்ய 1974-ம் ஆண்டு முதல் சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. எனினும் இதனை தங்களது அடிப்படை உரிமையாக அறிவிக்கும்படி பெண்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு 2022-ல் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து கருக்கலைப்பு உரிமையை அரசியல் அமைப்பில் சேர்க்கும்படி பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

எனவே கருக்கலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார். அதன்படி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு உரிமை குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின் வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 780 எம்.பி.க்களும், எதிர்த்து 72 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதனால் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. அதிபர் கையெழுத்திட்ட பிறகு இந்த மசோதா சட்டமாக மாறும்.

இதன் மூலம் அரசியல் அமைப்பில் கருக்கலைப்பு உரிமையை வழங்கிய முதல் நாடாக பிரான்ஸ் மாறி உள்ளது. இதனை வரவேற்று தலைநகர் பாரீசில் திரண்ட பெண்ணுரிமை ஆர்வலர்கள் ஆட்டம், பாட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், `நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. உங்கள் உடல் உங்களுக்கு சொந்தம். அதில் மற்றவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது’ என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *