மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு!!

மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை நிரம்பியது. மேலும் கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நேற்று மாலை தனது முழு கொள்ளளவை எட்டியது.

அணை கட்டியதில் இருந்து 44-வது முறையாக நிரம்பியதால் மேட்டூர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் 16 கண் மதகு மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அந்த தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை கண்டு ரசித்து செல்போனில் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டதால் கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் மேட்டூரில் காவிரி கரையோர பகுதியான தங்கமாபுரி பட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் இன்று 2-வது நாளாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் அணை நிரம்பியதால் சரபங்கா நீரேற்றும் திட்டம் மூலம் 57 ஏரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *