சென்னை:
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 176 ரன்கள் வித்தியாசத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது. 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், தொடர் நாயகன் விருதையும் ஸ்டார்க் வென்றார்.
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஸ்டார்க் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக (15 பந்துகளில்) 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்டார்க் படைத்தார். ஸ்டார்ட் வீசிய முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளையும் 3 ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும், மிட்செல் ஸ்டார்க் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். க்ளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.