மக்களின் உரிமைகளை பாதுகாக்க, திறமையான வெளிப்படைத் தன்மையுடன் நீதி நிர்வாகம் நடத்தப்படும் – சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி!!

சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்.

புதிய தலைமை நீதிபதி எம் எம் ஶ்ரீவஸ்தவா- வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், தமிழகத்தின் பெருமைகளையும் சென்னையின் வளமையையும் 163 ஆண்டு பழமையான உயர் நீதிமன்றத்தின் தொன்மையையும், தமிழின் பெருமையையும் விளக்கி, நீதி பரிபாலனத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர காரணமாக இருந்த தலைமை நீதிபதி மூலமாக தமிழகத்திலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதே போல பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் புதிய தலைமை நீதிபதி வரவேற்று பேசினர்.

பின்னர் ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா, 1892 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் சாவியை பெற்றுக்கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சர் ஆர்தர் கோலன், எந்த பாகுபாடும் இல்லாமல் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த மரபை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதி அளித்தார்.

மக்களின் உரிமைகளை பாதுகாக்க, திறமையான வெளிப்படைத்தன்மையுடன் நீதி நிர்வாகம் நடத்தப்படும் என்றும், வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவதாகவும் உறுதி தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *