கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடக்கம்!!

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள, மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவரின் பிறந்தநாளை ஆடி மாத திருவாதிரை விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழா, மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை அவர் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவை முன்னிட்டு இன்று காலை பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் யாழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாட்டிய நாடகம், கிராமிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதியம் “சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் நிர்வாகத்திறனே! போர் வெற்றிகளே!” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மக்களிசைப் பாடல்கள் நடைபெற்றன. மாலையில் ராஜேந்திரசோழன் நாடகம், மயில் காவடி, கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வருகிற 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அங்கு சுமார் 3 மணி நேரம் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார். இந்த விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும், தொல்லியல் துறை சார்பில் அங்கு அமைக்கப்படும் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.

அதன் பின்னர், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கிறார். இளையராஜா சமீபத்தில் லண்டனில் நிகழ்த்தி சாதனை படைத்த சிம்பொனி இசையை கங்கைகொண்ட சோழபுரத்தில் அரங்கேற்றுகிறார். அதனை பிரதமர் மோடி 20 நிமிடங்கள் கேட்டு ரசிக்கிறார்.

விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்குள் அவர் நுழையும்போது 50 ஓதுவார்கள் மூலம் திருவாசகம் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த விழாவில் தமிழ்நாட்டில் உள்ள 38 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனர்.

கோவில் வளாகத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அரியலூரில் பல்வேறு பகுதிகளில் இருந்து கங்கைகொண்ட சோழ புரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *