திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 24 -ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு செப்டம்பர் 24-ந் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றம் நடைபெறும் அன்று மாநில அரசு சார்பில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான செப்டம்பர் 28-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான அக்டோபர் 2-ந் தேதி அங்குள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெற உள்ளது.
பிரமோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து நேற்று அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்காய சவுத்ரி, திருப்பதி கலெக்டர் வெங்கடேஷ் வரலு, போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷ வர்தன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது, போலீசார் உடன் இணைந்து தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது பக்தர்களை நெறிமுறைபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்கள் தங்களது வாகனங்களில் மலைக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் தங்களது வாகனங்களில் வருவதை தவிர்த்து அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும்.
அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.