கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்தும் கண்டு கொள்ளாத விஜய் – விரக்தியில் அமமுக!

சென்னை:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெகவுடன் கூட்டணி வைக்க தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர்கள் கண்டுகொள்ளாதது அமமுகவினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜயும் களமிறங்குவதால், கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு ஒரு மாதமாக வெளியே வராமல் இருந்தார் விஜய்.

கூட்ட நெரிசலுக்கு தவெகவையும் விஜய்யையும் பல கட்சிகளும் குறை கூறிய நிலையில், தவெக தரப்பு அடக்கியே வாசித்தது. அதிமுக, பாஜக கட்சிகள் விஜய் மீது தவறு இல்லை என்று கூறி வந்தன.

இதனால், அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்வார் என்று பேச்சுகள் எழுந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் அதிமுக, பாஜக கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில், டிடிவி தினகரனை எதிரியாகக் கருதும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கூட்டணியில் தினகரன் நீடிப்பதை விரும்பவில்லை. அதன் பிறகு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகம் வந்தபோதுகூட தினகரனுக்கு அழைப்பு இல்லை.

சூழலை உணர்ந்து கொண்ட தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். பழனிசாமி உறுதியாக இருப்பதால், அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சிகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதிமுக- பாஜக கூட்டணி பக்கமும் கதவடைப்பு, திமுக- அணியிலும் சேர முடியாத நிலை. தனித்து நின்றால் தோல்வி என்ற நிலையில், சமீபகாலமாக, 2026 தேர்தலில் விஜய் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று தினகரன் கூறி வந்தார்.

இப்போது, விஜய்யின் வருகை, அதிமுகவை 2026 தேர்தலில் 3-ம் இடத்துக்கு தள்ளும் என கூறி வருகிறார். தவெகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவதன் மூலம் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க தினகரன் தொடர்ந்து தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவித்து வருகிறார்.

இருப்பினும் தேர்தல் நெருங்கும்போது பார்த்துக்கொள்ளலாம், கொஞ்சம் இழுத்து பிடிப்போம் என்று விஜய் கருதுவதாக, தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. தங்கள் விருப்பத்தை தெரிவித்தும், விஜய் கண்டுகொள்ளாதது அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தினகரன், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து விஜய்க்கு தூது அனுப்பி கூட்டணி விருப்பத்தை தெரிவித்து வருவதாகவும், ஆனால் விஜய் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *