தூத்துக்குடி:
இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.
இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் தொழில் அமைதல், முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், மனநலம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேண்டி அம்மனுக்கு நேர்ச்சையாக ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உட்பட 100-க்கு மேற்பட்ட வேடம் அணிவார்கள்.
இதில் விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடங்கள் அணிபவர்கள் குறைந்தது 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி, எடுப்பவர்கள், வேல் குத்தி வருபவர்கள் 61,41, 31,21 நாட்கள் என தங்கள் வசதிக்கேற்ப விரதம் தொடங்குவார்கள்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதாலும் 41-வது நாள் விரதம் தொடங்குவதாலும் இன்று அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர்.
கோவில் நடை காலை 6 மணிக்கு தான் திறக்கும் என்பதல் அதற்கு முன்னரே கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் விற்கும் துளசி மாலை மற்றும் பாசிமாலை வாங்கி கடல்நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்து கோவில் பட்டர் அய்யப்பனிடம் கொடுத்துமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
ஏராளமான பக்தர்கள் சிகப்பு ஆடை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் காலை, இரவு இளநீரு, மதியம் மண்பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிட்டு வருவார்கள். காளி வேடத்தில் 100 சடை, 200 சடை முடி என அணியும் பக்தர்கள் தனியாக தென்னம் ஓலையில் ஊரில்குடில் அமைத்து அதில் முத்தாரம்மன் படம் வைத்து தாங்கள் வேடம் அணிய பயன்படுத்தும் பொருட்களை வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்து வழிபடுவார்கள். உடன்குடி, குலசை பகுதியில் காளி வேடம் அணியும் பக்தர்கள் சிலர் இரவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு இரவில் தங்கி விட்டு காலை யில் வழக்கம் போல் தங்கள் பணிக்கு செல்வார்கள்.
தற்போது காளி வேடத்திற்கான சடை முடி, கிரிடம், சூலாயுதம், நெற்றி பட்டை,வீரப்பல் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பணியில் கடந்த 2 மாதமாக ஏராளமான தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்குவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தற்போதிலிருந்தே உடன்குடிக்கு வர தொடங்கி உள்ளதால் உடன்குடி பகுதி கட்ட தொடங்கி உள்ளது. தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவவர் வள்ளி நாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.