சென்னை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேருஸ்டேடியத்தில் கடந்த 5 தினங்களாக நடைபெற்றது.
போட்டி முடிவில் தமிழக அணி 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை குவித்தது. இதன் மூலம் ஆண்கள் ( 101 புள்ளிகள்) மற்றும் பெண்கள் ( 90 புள்ளிகள்) அணிகள் பிரி வில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 195 புள்ளிகளுடன் தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரியானா 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.
தனிநபர் சாம்பியன் ஷிப் பட்டத்துக்கு ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் விஷால் (400 மீட்டர் ஓட்டம்), பெண்கள் பிரிவில் உத்தரகாண்டின் அங்கிதா (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் தேவாரம், தலைவர் ராஜேந்திரன், செயலாளர் லதா, ஆக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், மார்ட்டின் குரூப் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
தேசிய சீனியர் தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகளம் சார்பில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதோடு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், வெண்கல பதக்கத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷாலுக்கு சிறப்பு பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
64-வது தேசிய தடகள போட்டியில் பதக்கத்தை வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் டபிள்யு. ஐ.தேவாரம், தலைவர் டி.கே.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சி.லதா ஆகி யோர் விழாவில் பங்கேற்று வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு தொகைகளை வழங்கினார்கள்.