மதுரை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு பிரசித்தி பெற்ற வேதநாயகி அம்பாள் உடனுறை திருமறைநாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது.
இது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உப கோவிலாகும். மேலும் திருவாசகம் அருளிய அருளாளர் மாணிக்கவாசகரின் திரு அவதார திருத்தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவிற்கு திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகர் சுவாமி இங்கிருந்து புறப்பட்டு அங்கு சென்று அந்த திருவிழாவில் பங்கேற்பது வழக்கமாய் உள்ளது.
அதேபோல் இந்த ஆண்டு ஆவணி மூலத் திருவிழாவிற்காக மாணிக்கவாசகர் இன்று காலை சுமார் 7 மணி அளவில் திருவாதவூரிலிருந்து சப்பரத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.
செல்லும் வழியில் இடையபட்டி, சுருக்குளிபட்டி, திருமோகூர் காளமேகப் பெருமாள் மண்டபம், பெருங்குடி, ஒத்தக்கடை உத்தங்குடி, தல்லாகுளம், கீழமாரட்டு வீதி வழியாக பல்வேறு மண்டகப் படிகளில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து இன்று மாலை 4 மணி அளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சென்றடைகின்றார்.
அதனைத் தொடர்ந்து நாளை (2.9-2025) மாலை 6 மணிக்கு மேல் ஆடி வீதி 16 கால் மண்டபத்தில் குதிரை கயிறு மாறுதல் லீலை, நரியை பரியாக்கிய திருவிளையாடலில் பங்கேற்கிறார்.
நாளை மறுநாள் (3.9.2025) புதன்கிழமை அன்று பிட்டு தோப்பில் பிட்டு திருவிழா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவீதி உலா நடைபெறுகிறது. அதில் மாணிக்கவாசகர் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாதவூர் வந்தடைகிறார்.