ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு குழந்தைகளுடன் வாருங்கள் – தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மாற்றத்தைப் பாருங்கள்!! ஜெர்மனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு….

சென்னை,
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றியதாவது:-


உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்…. பல்லாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான், உண்மையான தமிழ்ப் பாசம்! தமிழினப் பாசம் இது.

உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழன் இருப்பான்; தமிழ்க் குரலைக் கேட்கலாம்” என்று சொல்கின்ற அளவுக்கு உலகெல்லாம் பரவி, தங்களுடைய அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம்தான்.

நம்முடைய தமிழினம்! நம்முடைய இனத்திற்கான இதுதான் மிகப் பெரிய பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும், இனமும் நம்மை இணைக்கின்றது. கண்டங்களைக் கடந்துவிட்டாலும், நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை. உடன்பிறப்புகளாக, தமிழர்களான நாம் இணைந்திருக்கிறோம்.

ஜெர்மனி நாட்டில் உங்கள் எல்லோரையும், அதுவும் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றபோது மகிழ்ச்சி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்புமிக்க இடத்தில் இருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனாக மிகந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

நம்முடைய தமிழ்நாட்டு வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் – சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள். இங்கு இருக்கக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கேள்வியும் பட்டிருப்பீர்கள்.

இந்த வளர்ச்சியை இன்னும் இன்னும் விரைவுப்படுத்த வேண்டும் என்று தான் முதலீட்டாளர்கள் மாநாடு, அதாவது முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கெல்லாம் பயணத்தை மேற்கொண்டு ஏராளமான முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்து, நம்முடைய மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

இப்படி வெளிநாடுகளுக்கு வரும்போது, முதலில் எனக்குள் என்ன தோன்றுகிறது என்றால், இந்த நாட்டில் வாழுகின்ற நம்முடைய தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கைத்தரம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது? பெரும் பாடுபட்டு தலைநிமிர்ந்த இந்த இனம், இந்த மண்ணில் சுயமரியாதையுடன் நடைபோடுவதை பார்க்கவேண்டும் என்று நான் நினைப்பேன்.

அதிலும் முக்கியமாக, ஒரு அயலக மண்ணில், நம்முடைய தமிழைக் கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிடும்.

எல்லோருக்கும் அப்படிதான். அதனால்தான், ஜெர்மனிக்கு வந்தவுடனே முதலில் உங்களை சந்திப்பதற்கு வந்துவிட்டேன். இப்போது உங்களுடைய ஆரவாரத்தை கேட்கும்போது மகிழ்ச்சியை பார்க்கும்போது, நொடியில் தமிழ்நாட்டிற்கு டிராவல் செய்த உணர்வு ஏற்படுகிறது.

மனிதன் எங்கே சென்றாலும், அவனுடைய வேர் இருக்கின்ற தாய்நிலத்தை மறக்க மாட்டான். அப்படித்தான் உங்களுடைய நினைப்பும், எப்போதும் தமிழ்நாட்டின் மீதே இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்களும் உங்களை அன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் நம்முடைய திராவிட மாடல் அரசில், அயலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.


இந்த ஆண்டு மட்டும், இந்த அயலகத் தமிழர் நாள் விழாவுக்கு எத்தனை நாடுகளில் இருந்து நம்முடைய தமிழர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள் தெரியுமா? 62 நாடுகளிலிருந்து வந்தார்கள்! சொந்த மண்ணில் கால் வைத்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து அதை நான் ரசித்தேன் – புலங்காகிதம் அடைந்தேன் – பூரிப்படைந்தேன்.

அடுத்து, அயலகத் தமிழர் நலவாரியம். அயலகத் தமிழர்களுக்கான டோல்-ப்ரீ ஹெல்ப்லைன், அதேபோன்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சுழல் நிதி, தமிழ்நாட்டுக்கு வெளியே வாழுகின்ற தமிழர்களுக்கு இன்சூரன்ஸ் என்று ஏராளமான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிடுகிறவர்களின் குடும்பத்திற்கு, நிதியுதவியும், பென்ஷனும் வழங்குகிறோம்.

இப்படி பார்த்து பார்த்து செய்து தருவதுடன், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசும், உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் உங்களை ஆதரிக்க, அரவணைக்க எப்போதும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் இருப்போம்.

இதை கேட்கும்போது வெளிநாடுகளில் அல்லல்படுகின்ற யாராவது ஒருவருக்கு நம்பிக்கை பிறக்கும்; அவர்களுக்கும் உதவ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தான் சொல்கிறேன்.

இப்போது நான் சொன்ன முன்னெடுப்புகள் எல்லாவற்றையும்விட, மிக முக்கியமான திட்டம்தான், வேர்களைத் தேடித் திட்டம்.

வெளிநாடுகளிலேயே செட்டில் ஆகிவிட்ட சிலர், “மண்ணை விட்டு பிரிந்து தூர தேசத்துக்கு வந்துவிட்டோமே, இனி இந்த சொந்தம் அவ்வளவுதானா” என்று உங்களுக்குள்ளே நிச்சயம் இது ஏற்பட்டிருக்கும்.

அப்படிப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுடைய குழந்தைகளை, மாணவர்களை நம்முடைய தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று, நம்முடைய மரபின் வேர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்.

2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், இதுவரைக்கும் 15 நாடுகளிலிருந்து 292 பேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். பலர், சில தலைமுறைகளாக விட்டுப் போன சொந்தங்களை தேடிக் கண்டுபிடித்து உருகியிருக்கிறார்கள்.

அவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், அவர்கள் மனதில் தேங்கி நின்ற பாசமும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்று நான் நினைக்கிறேன்.

“வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும்!” இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசின் மோட்டோ! இதற்காகத்தான் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய அரசின் திட்டங்களை நாம் ஏற்படுத்தி தருகின்ற வாய்ப்புகளை நீங்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதேசமயம், உங்கள் மீது இருக்கின்ற அன்போடும், உரிமையோடும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

எப்போதுமே எங்கேயாவது முதலமைச்சர் சென்றால், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் என்னிடம் ஒரு கோரிக்கையை வைப்பார்கள்.

ஆனால், நான் முதலமைச்சராக இருந்து உங்களிடத்தில் இப்போது ஒரு கோரிக்கையை வைக்க வந்திருக்கிறேன். ஒன்றும் பயப்படவேண்டிய அவசியமில்லை.

உலக நாடுகளை குறிப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று பார்ப்பவர்கள் நீங்கள்.

இதுபோல நம்முடைய தமிழ்நாடும் வளரவேண்டும் என்று நான் நினைப்பது போல தான் நீங்களும் நிச்சயமாக நினைப்பீர்கள். என்னைவிட அதிகமாகதான் நினைப்பீர்கள்.

எனவே, உங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து உங்கள் தாய் மண்ணுக்கு நீங்கள் செய்யுங்கள் – செய்வீர்கள் – செய்து கொண்டிருப்பீர்கள்.


நீங்கள், சிறியதாக தொழில் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் தொழிலைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சி செய்யவேண்டும்.

பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, நம்முடைய தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள்.

உங்கள் சொந்த கிராமங்களை கவனித்துக் கொள்ளுங்கள். அங்கே படிக்கின்ற நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஏழை – எளிய மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவிகளை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த பூமிப்பந்து முழுவதும் நீங்கள் எங்கே சென்றாலும், தமிழர் என்ற நம்முடைய அடையாளத்தை விடாதீர்கள். உங்கள் வேர்களை மறக்காதீர்கள்; தமிழை மறக்காதீர்கள்; தமிழ் மண்ணையும், மக்களையும் மறக்காதீர்கள்!

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு குழந்தைகளுடன் வாருங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மாற்றத்தைப் பாருங்கள். நம்முடைய பண்பாட்டை, வரலாற்றை, அரசியல் எழுச்சியை எடுத்துச் சொல்லும் கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கலைஞர் உலகம் என்று ஏராளமான இடங்கள் இருக்கிறது.

அதையெல்லாம் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் சுற்றி காண்பித்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் உறவாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தமிழ்நாட்டில் இருக்கிறேன்.

குடும்பத்துடன் இங்கே வந்து, இந்த மறக்க முடியாத வரவேற்பை கொடுத்திருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி! விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *