பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரங்கநாத லே-அவுட்டில் வசித்து வந்தவர் மஞ்சு பிரகாஷ் (வயது 41). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் வெளியே கிடந்த செருப்பை போட்டு கொண்டு மஞ்சு பிரகாஷ் கடைக்கு சென்றார். அந்த செருப்பு, கட் ஷூ மாதிரி வடிவமைப்பை கொண்டதாகும்.
கடைக்கு சென்று ஜூஸ் வாங்கிவிட்டு அவர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவா் தனது செருப்பை வீட்டு வாசலில் கழற்றிவிட்டு, தனது அறைக்கு சென்று படுத்திருந்தார். இந்த நிலையில், மஞ்சு பிரகாஷ் வீட்டுக்கு வந்த ஒரு தொழிலாளி, மஞ்சு பிரகாசின் செருப்புக்குள் பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வெளியே வந்து செருப்பில் பதுங்கியிருந்த பாம்பை ஒரு கம்பால் வெளியே எடுத்தனர்.
அப்போது கண்ணாடி விரியன் பாம்பு என்பதும், அந்த பாம்பு செத்து போய் இருந்ததும் தெரியவந்தது. அதே நேரத்தில் படுக்கை அறையில் வாயில் நுரை தள்ளியபடி மஞ்சு பிரகாஷ் பிணமாக கிடந்தார். அவருக்கு உயிர் இருப்பதாக நினைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினா் கொண்டு சென்றனர்.
அங்கு மஞ்சு பிரகாசை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதாவது செருப்பில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து மஞ்சு பிரகாஷ் பலியானது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் பன்னரகட்டா போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது கடந்த 2016-ம் ஆண்டு நடந்த விபத்தில் மஞ்சு பிரகாசின் காலில் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்தது.
அதன்பிறகு, அவரது கால் உணர்ச்சியற்றதாக மாறி மரத்துப்போய்விட்டது. இதனால் செருப்புக்குள் இருந்த பாம்பு கடித்தது கூட மஞ்சு பிரகாசுக்கு தெரியாமல் இருந்துள்ளது. செருப்புக்குள் இருந்த பாம்புடன், கடைக்கு சென்று வந்த சந்தர்ப்பத்தில், அந்த பாம்பு கடித்ததால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.