சீனா;
சீனாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற அமெரிக்கா மற்றும் பல்வேறு நாட்டின் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் கூட அங்கு பயன்பாட்டில் இல்லை.

உள்நாட்டை சேர்ந்த வெய்போ என்ற சமூக வலைதளம் மட்டுமே அங்குள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு சீனா சென்ற பிரதமர் மோடி பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் வெய்போ தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கடந்த 2 நாட்களாக வெய்போ தளத்தில் பிரதமர் மோடி தான் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றதால் இந்த ஆண்டு ஷாங்காய் உச்சி மாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் பிரதமர் மோடி பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.
இந்த நிலையில் சீனாவின் வெய்போ சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஒன்றாக கலந்துரையாடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்த வீடியோக்களும் வைரலாக பரவி வருகின்றன. பிரதமர் மோடியின் நடை, உடை, பாவனைகள் மற்றும் துணிச்சலான முடிவுகள் குறித்து சீனர்கள் அதிகம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த உச்சி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.