தென்காசி
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணை கோவிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் திருநாளான நேற்று மாலையில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதி வழியாக சென்று மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
சிகர நிகழ்ச்சியான ஆவணித் தபசு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை காலை 10.00 மணிக்கு சுவாமி, அம்பாள், முகலிங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
மதியம் 2.30 மணிக்கு ஒப்பனை அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு ஒப்பனை அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் முகலிங்க நாதர் வடிவமாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு ஒப்பனை அம்பாளுக்கு யானை வாகனத்தில் ஸ்ரீ பால்வண்ணநாதர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் கடைசி நாளான 14-ம் திருநாளான 4-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் சப்தாவர்ணம் சப்பரம் ரத வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.