“நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை கையாளத் தெரியவில்லை.” – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் !!

மதுரை:
“நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை கையாளத் தெரியவில்லை.” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மதுரையில் கூறியதாவது: மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தோம். மக்களவைத் தேர்தல் வேறு, சட்டப்பேரவை தேர்தல் வேறு.

தற்போது அவர்கள் பழனிசாமியை முதல்வராக அறிவித்தார்கள். அதைப் பற்றி என்னிடம் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு யாரை எதிர்த்து, எதற்காக கட்சி ஆரம்பித்தோம் என்றும், அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியுமா? என்றும் கேட்டோம். அதிமுக ஆட்சிக்கு வர, அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவெடுக்க வேண்டும். எங்களுடைய இந்த இடர்பாடுகள் நீக்கப்பட்டால் நாங்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவோம்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி அமைத்தபோது, அவரை விட மூத்த அரசியல்வாதிகள் அவருடன் இணைந்தனர். அதைப்போன்று, தவெக கூட்டணியில் விஜய்யுடன் நாங்கள் இணைந்தால் என்ன தவறு. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைதான், எங்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவந்தார். அவர் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியான ஒன்றுதான்.

ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. அவருக்கு கூட்டணி கட்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. இதே நிலைதான் நமக்கும் ஏற்படும் என்பதால், கூட்டணி விலகல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமையும் எங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. இதே நிலை நீடித்தால், அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது கடினம் என அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது அதிமுகவுக்கு நல்லது என்ற செங்கோட்டையன் கருத்தை நான் வரவேற்கிறேன். இதை, அங்குள்ள கட்சி தலைமை, தொண்டர்கள் உணரவில்லை என்றால், மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது கடினம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கான இடர்பாடுகள் களையும்பட்சத்தில் அந்த கூட்டணியில் இணைவோம்.

எங்களின் முதல் முக்கியத்துவம் அக்கூட்டணிதான். இல்லாவிட்டால், மற்ற கூட்டணியில் இணைவோம். அது எந்தக் கூட்டணியாகவும் இருக்கலாம். நாங்கள் எதற்காகவும், யாருக்கும் அடி பணிய மாட்டோம். கண்டிப்பாக திமுகவுடனும், சீமானுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது அருகில் மாவட்டச் செயலாளர் டேவிட்அண்ணாத்துரை மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *