சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
அதிலும் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது.
இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது.
நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
09.09.2025 ஒரு சவரன் ரூ.81,200 (இன்று)
08.09.2025 ஒரு சவரன் ரூ.80,480 (நேற்று)
07.09.2025 ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025 ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025 ஒரு சவரன் ரூ.79,920
04.09.2025 ஒரு சவரன் ரூ.78,360