இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் சுற்ற்பயணம் மேற்கொண்டபோது, 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதைதொடர்ந்து நடைபெற்றுள்ள 3 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் அசத்திய இந்தியா:
தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜாக் கிராவ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 79 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். அதோடு, ஜெய்ஷவால், படிக்கல் மற்றும் சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் அரைசதம் விளாசினர். இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2வது இன்னிங்ஸில் சுருண்ட இங்கிலாந்து:
259 ரன்கள் பின் தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் அதிகபட்சமாக 84 ரன்களை சேர்த்தார். பேர்ஸ்டோ 39 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதனால் அந்த அணி 195 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதோடு, டெஸ்ட் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலும், 100வது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் தமிழக வீரர் அஷ்வின் படைத்துள்ளார்.

தொடரின் முடிவுகள்:


ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தர்மசாலாவில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் & 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *