மகாபாரதத்தில் துரியோதனன், தன் தாய்மாமன் சகுனியைக் கொண்டு சூழ்ச்சி செய்து, பஞ்சபாண்டவர்களை சூதாட்டத்தில் வென்றான்.
இதனால் பாண்டவர்கள் ஐவரும், பன்னிரெண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞான வாசமும் செல்லும்படி நேர்ந் தது. காட்டில் 12 வருடத்தை கழித்த பாண்டவர்கள், 13-வது வருடத்தை துரியோதனிடம் செய்த ஒப்பந்தப்படி, தலைமறைவாக வாழத் திட்டமிட்டனர்.
யட்ச ராஜன் வரத்தின் பலனால் பாண்டவர்கள் ஐவரும், தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தனர். எனவே அவர்களை, உருவத்தை மாற்றிக்கொண்டு, மத்ஸ்ய தேசத்தின் அதிபதியான விராட மகாராஜாவிடம் பணியாற்றும்படி, தவும்ய மகரிஷி அனுப்பி வைத்தார்.
அதன்படி தருமன், கங்கன் என்ற பெயரில் சகுன – தர்ம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனாக உருமாறினான். பீமன் தனது சமையல் திறமையால், வல்லபன் என்ற பெயரில் சமையல்காரன் ஆனான்.
அர்ச்சுனன், ஏற்கனவே ஊர்வசியிடம் பெற்றிருந்த சாபத்தின்படி பிருஹன்னனை என்ற திருநங்கையாக மாறினான். நகுலன், தாமக்ரந்தி என்ற பெயரில் குதிரை பராமரிப்பாளனாகவும், சகாதேவன், தந்திரி பாலன் என்ற பெயரில் பசுக்களை காப்பவனாகவும் பொறுப்பேற்றனர். திரவுபதி, சைந்திரி என்ற பெயரில் ராணியின் வேலைக்காரியாக சேர்ந்தாள்.
இப்படி பாண்டவர்கள் விராட மன்னனின் அரண்மனையில் 10 மாதங்கள் தலைமறைவாக இருந்தனர். ‘பாண்டவர்கள் இருக்கும் இடம் செழிப்பாக இருக்கும்’ என்று பீஷ்மர் சொன்ன தகவலை வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தை தேடச் சொன்னான் துரியோதனன்.
ஒற்றர்களும், விராட தேசம் மிகவும் செழிப்பாக இருப்பதாக வந்து சொன்னார்கள். பாண்டவர்கள் அங்குதான் இருக்க வேண்டும் என்று கருதிய துரியோதனன், திரிகர்த்த நாட்டு அரசன் சுசர்மாவை, விராட நகரத்தை ஒரு புறத்தில் இருந்து தாக்கும்படி உத்தரவிட்டான். மற்றொரு புறத்தில் இருந்து கவுரவர்கள் படை தாக்கும் என்றும் கூறினான்.
அப்படி விராட நகரத்தை தாக்கிய சுசர்மாவை எதிர்ப்பதற்காக, தருமர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் சென்றார் விராட மன்னன். அவர்கள் அந்தப் படையை விரட்டி அடித்தனர். துரியோதனன் முதலானவர்கள் விராட நகரத்தின் வடக்கு பக்கத்தில் இருந்து போரிட வந்தனர்.
அவர்களை எதிர்க்க விராட மன்னனின் மகன் உத்தரம் படையெடுத்துச் சென்றான்.
அப்போது திருநங்கையாக இருந்த அர்ச்சுனன், உத்தரனுக்கு தேரோட்டியாகச் சென்றான்.
துரியோதனனின் படையைக் கண்டு உத்தரன் பயந்து ஓட முயன்றான். ஆனால் அவனைத் தடுத்த அர்ச்சுனன், நீ தேரை செலுத்து, நான் அவர்களோடு யுத்தம் செய்கிறேன்’ என்றான்.
பின்னர் அங்கிருந்த வன்னி மரத்தின் அருகே சென்று, மரத்தின் அடியில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து வந்து துரியோதன படையுடன் போரிட்டு வெற்றி யும் பெற்றான், அர்ச்சுனன்.
அந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் ஆயுதங்கள், நாம் வேலை செய்வதற்கான கருவிகளை பூஜிப்பது நன்மை தரும்.
மறுநாள் விஜயதசமி அன்று வன்னி மரத்தை பூஜிப்பதும், விஷ்ணு பகவானை தியானிப்பதும், லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். மேலும் பெருமாள் கோவில்களில் வன்னி மரத்தில் பானம் போடும் நிகழ்வு நடக்கும்.
விஜயதசமி நாளில் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியாக முடியும் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் ஒருசேர வழிபட்டால் வளமான வாழ்வு அமையும்.
அன்னை, மகிஷாசுரன் என்ற தீமையை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதை போன்று, நம் மனதில் உள்ள கோபம், தீய எண்ணம், பொறாமை, பேராசை போன்றவை அழிந்து நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.