சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் இன்று மாலை 3 மணிக்கு கரூர் செல்கிறார். முதலில் பிரசாரம் நடந்த வேலுசாமிபுரத்தில் சம்பவ இடத்தை பார்வையிடுகிறார்.
அதன்பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்க உள்ளார்.