புதுடெல்லி:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந்தேதி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவலும் வெளியாகவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகிறார்.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.