கரூர்,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 1
00-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து கரூர் போலீசாரும் விசாரணை நடத்தி த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி இறந்தனரா? அல்லது மற்றவர்களின் கால்களால் மிதிக்கப்பட்டோ அல்லது தாக்கப்பட்டோ இறந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காயம் அடைந்தவர்களிடம் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
இந்த நிலையில், விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் நலம் விசாரித்து, தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.
கூட்ட நெரிசலில் 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் முதற்கட்டமாக 45 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது அம்மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உடனிருந்தார்.
காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.